Saturday, September 5, 2015

தனி ஒருவன்!!!



பதின்ம காலத்தில்  சஸ்பென்ஸ் நாவல்கள் மீது பித்தாக இருந்திருக்கிறேன்....கிடைத்த நேரத்தில் கிடைத்த இடத்தில் என்னை மறந்து படித்துக்கொண்டிருப்பேன்....சுபா, ராஜேஷ்குமார்,பிகேபி,சுஜாதா...பெரும்பாலும் முதல் அத்தியாயம் ஒரு கொலையில் துவங்கும். கொலைகாரன் யார் என்பதையோ அல்லது எப்படி பிடிபடுகிறான் என்பதையோ நோக்கிதான் கதை ஓடும்.

அதிலும் சுபாவின் நரேன் வைஜெயந்தி கலக்கும் நாவல்களில் எழுத்திலே பரபரப்பை கொண்டு வந்திருப்பார்கள் இரட்டையர்கள்....நாவலை படிக்கும்போதே விசுவலாக பார்ப்பது போல எழுதியிருப்பர்....இதையெல்லாம் சினிமாவாக யாரும் எடுக்க மாட்டேன்கிறார்களே என்று நினைத்துக்கொள்வேன்....KV ஆனந்துக்கு சுபா எழுத ஆரம்பித்த பின் அந்த கூட்டணி என் ஆசையை நிறைவேற்றியது....

இப்போது 'தனி ஒருவன்' ! டைட்டில் முதல் எண்டு கார்டு வரை பரபர ரேஸ் வேகம்....ஹீரோவும் வில்லனும் சமமாக ஒருவரோடு ஒருவர் போட்டி போடும் படங்கள் எப்போதுமே சுவாரஸ்யம் தான் ....சும்மா ஹீரோவை பில்ட் அப் பண்ண மொக்கை வில்லன்களை பந்தாடுவதை பார்த்து சலித்த மக்கள் எப்போதும் இதை ரசிப்பார்கள்....

கீழ்மட்ட அரசியல், உபயோகபடுத்தப்படும் தொண்டர்கள், இளம் குற்றவாளிகள், அரசியல் வணிக தொடர்பு, மருந்து அரசியல், பேடண்ட், செய்தி அரசியல், ட்ராக்கிங் டெக்னாலஜி என்று பல விஷயங்களை தொட்டுச்செல்கிறது படம். லாஜிக் எல்லாம் பின்பு தனியாக உக்கார்ந்து யோசித்தால் இடிக்கலாம் ஆனால் படம் பார்க்கும்போது வேகம் மட்டும்தான்

IPS என்றால் நம்பக்கூடிய உடல் அமைப்பு மற்றும் உடல் மொழியை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி. ரொம்ப நிறைவான நடிப்பு

அனால் அரவிந்தசாமிதான் show stealer என்று நான் தனியா சொல்லனுமா என்ன....தமிழ் சினிமா உலகம் எப்பவுமே வில்லன்களுக்கு தனி இடம் குடுத்திருக்கு.....வில்லன்ல இருந்து ஹீரோ ப்ரோமோஷன் வாங்கின பட்டியல் பெருசு...ஹீரோல இருந்து வில்லனும் புதுசில்ல...ஜெயசங்கர்(முரட்டு காளை முதல்),ரவிச்சந்திரன்(ஊமை விழிகள்),ரகுமான்(எதிரி).....இந்த வரிசையில இப்போ அரவிந்த்சாமி...ஒரு அழகான சுவாரஸ்யமான புத்திசாலி வில்லனா படத்துல மத்த எல்லாரையும் தூக்கி முழுங்கிட்டார் ....கடல் இல்ல, இதுதான் உங்க நிஜ comeback

மோகன் ராஜா : இவ்வளவு திறமைய வச்சிகிட்டா வெறும் ரீமேக்கா எடுத்துதள்ளிக்கிட்டு இருந்தீங்க ? உங்க முதல் படம்(ரீமேக் அல்லாத) வேலாயுதம் அவ்வளவா எடுபடல....ஆனா தனி ஒருவான இல்லாம சுபா கூட்டணி போட்டு வெற்றியை பிடிச்சுட்டீங்க....வாழ்த்துக்கள்!

தமிழ்ல பிலிம்ல எடுத்த கடைசி படமாமே,,,,ராம்ஜி ஒளிப்பதிவை பாராட்டுற அளவு நமக்கு டெக்னிக்கலா தெரியாது....ஆனா ஒரு வேண்டிய டோன் அண்ட் மூட் கிடைச்சது

அப்புறம் அந்த 4 நண்பர்கள், தம்பி ராமையா , நயன்தாரா  எல்லாரும் நல்ல "Supporting Cast "

இன்னும் எதுக்கு மக்கா suspense thriller டூயட் பாட்டு.....படத்துல ஸ்பீட் பிரேக்கர் அதுதான்....

பாக்காதவங்க பாத்துடுங்க ....அம்புடுத்தேன்!!!
 

Sunday, August 10, 2014

ரவுடி

நான் அமரிக்காவில்   வாங்கிய பல்புகளை எல்லாம் சேர்த்தால் ஒரு பெரிய சீரியல் செட்டே போடலாம் ....சாம்பிள் ஒன்று....

முதல் முறையாக US வந்து ஒன்றிரண்டு வாரங்கள் தான் ஆகியிருந்தன. சமஞ்ச பொண்ணு தனியா போக வெக்கப்படற மாதிரி காபி குடிக்க, சாப்பிட, பஸ்/ட்ரைன் என எல்லா நேரமும் கூட ஒரு அனுபவஸ்தன கூடவே இழுத்துட்டு சுத்தின காலம். எதுக்குன்னா காபி கடை, சாண்ட்விச் கடைல இருந்து சலூன் வரைக்கும் கேள்வி கேட்டே கொல்லுவாங்க ....

ஒரு உதாரணத்துக்கு காபி குடிக்க போறீங்க. அந்த பில் போடற அம்மிணி தலைக்கு மேல இருக்குற போர்ட ஒரு அஞ்சு நிமிஷம் படிச்சிட்டு ஒரு வழியா முடிவு பண்ணி, மனசுக்குல ஒரு தடவ சொல்லி பாத்துகிட்டு (ஐ லவ் யூ  இல்ல.....ஒரு சாதாரண காபி தான்) ஆரம்பிச்சா .....இப்படி இருக்கும் நம்ம உரையாடல்

One coffee please....
Just regular or do you want a Cappuccino or a Latte?
Just regular, Please
What Size?
(இது வேறயா ....திரும்ப மேல போர்ட பாத்தா அங்க கப் சைஸ் எல்லாம் ounce ல போட்டிருபப்பான் . சமாளிப்போம் அப்படின்னு நெனச்சிகிட்டு)
Small size please
Ok a tall coffee, anything else?
(என்னடா இது வம்பு, நாம smallனு கேட்டா தெளிவா Tall அப்டின்னு மாத்தி சொல்றா. ஒரு வேள பெரிய காபி விக்க பாக்கிறாளோ )
Sorry i meant  a small coffee
Yes.The smallest size we serve is the "Tall"
(ஷப்பா!) ok

கைல அவ குடுத்த கப்ப வெற்றி கோப்பை மாதிரி பிடிச்சிகிட்டு காபி வச்சிருக்க எடத்துக்கு போனா ....அங்க 12 குடுவைகள்ல வித விதமான பேரு போட்ட காபி வச்சிருந்தாங்க . அதும் பேரு எல்லாம் House, Decaf,Breakfast Blend, Hazelnut,Arabica, Costa Rica, Namithaa .....(சரி ஒத்துக்கிறேன்கடைசி item  நானா சேர்த்தது). என்னடா இது சோதனை அப்டின்னு நின்னப்போ நல்ல வேலையா ஒரு சில மாசம் முன்னாடியே இதையெல்லாம் அனுபவப்பட்ட தோழி ஒருத்தி வந்து....."டேய், ஹவுஸ் எடுத்துக்கோ அதுதான் கொஞ்சமாவது வாய்ல வைக்க விளங்கும்" அப்டின்னு காப்பாத்தி விட்டு போனா.

அப்புறம் அத எடுத்து , creamer கலந்து , சர்க்கரை போட்டு வாய்ல வச்சா......கண்ணுல தண்ணி வந்துடுச்சு....அடபாவி வெள்ளைக்காரி இதுக்கு பேரு காப்பியா? கடையை சாத்திட்டு என் கூட வா நான் போட்ற இன்ஸ்டன்ட் காபி இதுக்கு நூறு மடங்கு தேவலாம் அப்படின்னு திட்டிகிட்டே காப்பிய டெஸ்க் கொண்டு வந்து நோக்கு வர்மத்தால காப்பிய காலி பண்ண முடியுமான்னு ஆராய்ச்சி பண்ணேன் (முடியல...கடசில அது குப்பைக்கு  தான் போச்சு )

பின்னால இதே காப்பிய தினம் ஒரு முக்கா லிட்டர் குடிக்கிற ஆளா மாறிட்டாலும், அப்போதைக்கு  புது விஷயங்களை  செய்யும்போது/புது இடத்துக்கு போகும்போது யாராச்சும் அனுபவஸ்தனை கூட வச்சிகிட்டேன்.

சம்பவம் நடந்த அன்னிக்கு நான் கண்ணாடில முழிச்சேன் போல இருக்கு, நெறைய வேலைக்கு நடுவுல மண்டை காபி கேக்குது, ஆனா கீழ கடைல போயி வாங்க நேரம் இல்ல . சரி நம்ம Pantry போயி சுமாரா இருந்தாலும் அந்த காபி எடுக்கலாம்னு போனேன்.

.
அந்த தாடிக்காரர தினம் அந்த தளத்துல பாத்துருக்கேன். என்னுடைய வேலைக்கும் அவருக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது, அதனால பேரும் தெரியாது. அவர் காபி எடுத்திட்டு இருந்தாரு. சரி அவர் முடிக்கட்டும்னு காத்திருந்தேன். திரும்ப என்ன பாத்தவர் "ரவுடி" அப்படின்னாரு.  என்னடா இது சோதனை , நம்மளத்தான் சொல்றாரா இல்லைன்னா  பின்னாடி யாரும் இருக்காங்களா அப்டின்னு பாத்தேன். ம்ஹும் , அங்க நாங்க ரெண்டு பேருதான். பொதுவா நம்ம ஆளுங்க காப்பி குடிச்சிட்டு புதுசா போட்டு வைக்காம போய்டுவாங்க அப்படின்னு இந்த வெள்ளைக்காரங்க திட்டி பாத்திருக்கேன். ஆனா நான் இன்னும் காபி எடுக்கவே இல்லையே. என்னைய பாது ஏன் இந்த வார்த்தைய சொன்னான்னு நெனச்சிகிட்டே காபி எடுக்காமலே திரும்ப எடத்துக்கு போய் வேல பாக்க ஆரம்பிச்சேன்.

ஒரு சில நாள்  அது உறுத்திகிட்டே இருந்திச்சு. நான் pantry பக்கமே போறத நிறுத்திட்டேன். அப்புறம் ஒரு நாள் library ல இருந்து வாடகைக்கு எடுத்துட்டு வந்த DVD ல ஏதோ ஒரு படம் பாத்துட்டு இருந்தேன். அதுல ஒரு காட்சில ஒரு தாத்தா சந்தோஷமா நடந்து போறாரு. எதிர்ல வர ஒருத்தன பாத்து "ரவுடி" அப்டின்னு சொல்றாரு.....அவனும் சிரிச்சிகிட்டே தலைய ஆட்டிக்கிட்டு போயிட்டான் .

என்னடா இது இந்த ஊருல ரவுடினா வேற ஏதோ நல்ல அர்த்தம் ஒன்னு இருக்கும் போல  அப்டின்னு யோசிச்சிட்டு, அந்த DVDய rewind பண்ணிட்டு , subtitle போட்டு , திரும்ப அந்த காட்சிய ஓட விட்டேன்.

அதே தாத்தா , அதே ஆளு, அதே மாதிரி ரவுடின்னு சொல்றார்....டக்குன்னு Subtitle ல என்ன ஓடுதுன்னு பாத்தேன்.....

"Howdy

Sunday, March 2, 2014

மீட்டிங் ரூம்!!!(சிறுகதை)

"நம்ம ரமேஷா?சான்சே இல்ல..." என்றான் அஷோக்....கையில் இருந்த தம்மை இழுத்தவாறே
"டேய்....நான் ஏண்டா பொய் சொல்ல போறேன்? ரெண்டு பேரும் மேல போறத பாத்துட்டு தான் சொல்றேன்" என்றான் சுகுமார். அவன் இந்த மாதிரி விஷயத்தில் பொய் சொல்வதில்லை.
"துரோகி, மத்த எல்லா நேரமும் நாம வேணும், இப்போ மட்டும் கழட்டி விட்டுட்டானா...வாடா நாமளும் போகலாம்" தம்மை எறிந்துவிட்டு கிளம்பினான்.

அந்த conference ரூம் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடி விருந்தினர்களுக்காக கட்டப்பட்டு தற்காலிகமாக சில அறைகள் எங்களால் பயன்படுத்த்தப் பட்டு வருகின்றன....பெரும்பாலான நேரம் ஆள் நடமாட்டம் இருக்காது....காலை நேரம் மீட்டிங் நிறைய இருக்கும், அப்புறம் எல்லா அறைகளும் காலிதான்.
அஷோக்கும் சுகுமாரும் இரண்டிரண்டு படிகளாக ஏறி ஓடினார்கள்.
"டேய்  எந்த ரூம்டா?"
"டேய் செகண்ட் ப்ளோர்ன்னு சொன்னதுதான் கேட்டுச்சு, எந்த ரூம்னு தெரியலையே"
"சரி எல்லா ரூமையும் பாத்துடலாம்"
முதல் அறை கதவில் கையில் வைத்து லேசாக தள்ளி பார்த்தான். கதவு உள்புறமாக திறந்தது.
"So the defect is caused by incorrect requirement...."என்று சொல்லிகொண்டே வந்தவன் அஷோக் கதவை திறந்ததும் கவனம் சிதறி நிமிர்ந்து பார்த்தான்.....பேச்சு தடைபட்ட எரிச்சல் அவன் கண்களில் தெரிந்தது. என்ன என்பதுபோல கண்களால் கேட்டான்.

"Is this the Proposal meeting by Arun?"
"No it is not. And by the way there is no Arun here. Can you please excuse us and close the door?"
விட்டால் கடித்துவிடுவான் போல.
"Sorry, i think we came to the wrong room" என்று சொல்லிவிட்டு கதவை சாத்தினான்.
"மச்சி தேவை இல்லாம அசிங்கபட்றோம்.....வாடா போய்டலாம்"என்றான் சுகுமார்.
"நீ வேண்ணா போ , நான் பாத்துட்டு தான் வருவேன்"
"நீ கேக்க மாட்டியே ....சரி வா பாத்துடலாம்"

அடுத்த ரூம் காலியாக இருந்ததது.அதற்கும் அடுத்த ரூமில் நடந்த மீட்டிங் சத்தம் வெளியே நன்றாக கேட்டது.அப்போ கண்டிப்பாக இதுவும் இல்லை. இன்னும் இருப்பது ஒரு ரூம்தான்.
கடைசி அறை வாசலில் நின்று இருவரும் தயங்கினார்கள். ஒரு வழியாக யோசித்து கதவை திறக்க கைப்பிடியை தொட்டபோது ....

கதவை திறந்து அவள் வெளியே வந்தாள். பெயர்....பெயரை விடுங்களேன், அதுவா முக்கியம். எங்கள் தளத்தின் தேவதை. அவள் தாண்டி செல்லும்போது எல்லார் கவனமும் சிதறி கீபோர்டுகள் தற்காலிகமாக அமைதியாகும். போன பிறகு பெருமூச்சுகள் விட்டபடி வேலை தொடரும்.

ஒரு கை கதவை பிடித்திருக்க, இன்னொரு கையால் உதடுகளை துடைத்தவாறே வந்தாள். எங்களை பார்த்தவுடன் கண்கள் ஒரு வினாடி விரிந்தன. வாயை  மீண்டும் துடைத்தாள் .சட்டென்று சுதாரித்து வேகமாக நடந்து போனாள்.நாங்கள் எதுவும் கேட்பதற்குள் போயே விட்டாள்.நாங்கள் இருவரும் உள்ளே போனோம்.

ரமேஷும் எங்களை எதிர் பார்க்கவில்லை. இருந்தாலும் சகஜமாக கேட்பதுப்போல, "டேய் வாங்கடா உங்களைத்தான் கூப்பிடலாம்னு இருந்தேன்" என்றான்.

"துரோகி, கூப்பிடுறதா இருந்தா, ஐட்டம் இருக்குனு தெரிஞ்ச உடனே கூப்பிட்டு இருக்கணும். இப்படி தனியாவந்து இருக்க கூடாது "
"இல்ல மச்சான்"
"பேசாதடா....அவள கூப்பிட்டு இருக்கே....எங்கள கூப்பிட தோணல இல்ல"
"டேய் அப்டிலாம் இல்லைடா"
"இல்ல மச்சான் நாம வந்தா அவனுக்கு முன்னாடி பினிஷ் பண்ணிடுவோம்னு நெனச்சான் போல"

"சரி சும்மா பேசிக்கிட்டு இருக்காதே...யாராச்சும் வரதுக்கு முன்னாடி அந்த கேக்க சாப்பிடுவோம்" என்று சொல்லியவாறே , மூவரும் அதற்கு முன்பு நடந்த மீட்டிங்கிற்காக வாங்கப்பட்டிருந்த கேக் மற்றும் சமோசாவை காலி செய்ய தொடங்கினார்கள்!



Monday, February 24, 2014

நானும் ஜிம்மும்

இது ஒரு கொசுவத்தி(Flashback) போஸ்ட்....

அணையப்போகிற விளக்கு தான் பிரகாசமாக எரியும் அப்படிங்கற மாதிரி,என்னுடைய பேச்சுலர் வாழ்க்கையின் இறுதி நெருங்கிக்கொண்டிருந்த நேரம்(2010 summer).வீட்டுல பொண்ணு தேடிகிட்டு இருந்தாங்க....அப்போதான் திடீர்னு அந்த ஆர்வம். சரி நம்ம 4 மூட்டை, 6 மூட்டை வச்சிக்கல அப்படினாலும் , வயத்துல இருக்கற புளி மூட்டையவாச்சும் கொறைப்போம்னு, ஜிம்முக்கு போகலாம்னு அதிரடி முடிவெடுத்தேன். சரி தனியா போக வேண்டாம், நம்ம தம்பி பாஸ்கரையும் தள்ளிக்கிட்டு போனேன்.

சரி ரொம்ப நாள் கழிச்சு போறோமேன்னு, முதல்ல டிரெட்மில்லுல ஆரம்பிக்கலாம்னு முதல்ல அதுல ஓடிக்கிட்டு இருந்தேன்.அதுல ரொம்ப பொறுமையா "Calories Burnt" மாறிகிட்டு இருந்துச்சு(நம்ம வேகம் அப்படி). சரி கொஞ்சம் வேகமா கரைக்கலாம்னு பக்கதுல இருந்த சைக்கிள்ல ஏறி கொஞ்ச நேரம் ஓட்டினேன்.கொஞ்ச நேரம் மாத்தி மாத்தி ரெண்டுத்துலயும் பண்ணிட்டு,தண்ணி குடிக்கலாம் அப்படினு ஒரு ரெண்டு அடி நடந்து வந்தேன்.
"........"
"#$@#$&"
"பாய்....பாய் என்னாச்சு.....சிவா பாய்...."
"இவன் ஏன் நம்ம பக்கத்துல நின்னு கத்திக்கிட்டு இருக்கான், ஒரு வேலை நமக்கு முன்னடி இன்னைக்கு காலைல பாஸ்கர் எந்திரிச்சுட்டானோ?இருக்காதே.அது சரி நாம ஏன் ஷூ போட்டுக்கிட்டு தூங்கிட்டு இருக்கோம்? " அப்படினு யோசிச்சுக்கிட்டே பாத்தா ....நான் இருக்கறது ஜிம்!

அய்யய்யோ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டதால கண்ண கட்டிடுச்சா.சரி சமாளிப்போம்.நிமிர்ந்து பாஸ்கரை பார்த்தால் அவன் பயந்து போய் இருந்தது அவன் கண்களில் தெரிந்தது.அந்த நேரத்திலும் எனக்கு சிரிப்பு வந்தது
"ஹே பாஸ்கர் ஒண்ணும் இல்லடா, லைட்டா டையர்டு ஆகிடுச்சி"

ஒரு 5 நிமிஷத்துக்கு பிறகு ஒரு வழியாக நான் சகஜமான பின்னர் இருவரும் வீடு நோக்கி நடந்தோம்.அது வரை அமைதியாக இருந்தவன்,

"யோவ் நல்ல மனுஷரய்யா நீர்....உம்ம கூட நான் இன்னிக்கு ஜிம்முக்கு வந்தேன் பாருங்க.ஒரு நிமிஷம் எனக்கு அல்லு இல்லை" என்றான்.சரி சின்ன பையன் பயந்துட்டான் போல , கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவான் அப்படினு விட்டுடேன்.வீட்டுக்கு போயும் ரொம்ப நேரம் பொலம்பிகிட்டெ இருந்தான்.

அது நடந்து ஒரு ரெண்டு நாள் கழிச்சு.....
"ஹேய், புலி பாஸ்கர். சும்மா தான இருக்க, ஜிம்முக்கு போலாமா"
"யோவ்...@$$!%@&&#*!*!@%$#$%%!@**" (அன்னிக்கு அவன் திட்டினது அச்சில் ஏத்த முடியாது :))